முபிஸால் அபூபக்கர்
முதுநிலை விரிவுரையாளர்
மெய்யியல் துறை
பேராதனைப்பல்கலைக்கழகம்
mufizal77@gmail.com.
முதுநிலை விரிவுரையாளர்
மெய்யியல் துறை
பேராதனைப்பல்கலைக்கழகம்
mufizal77@gmail.com.
இலங்கையில் வாழும் பௌத்தர்களின் இதயமாக இருப்பது, கண்டி நகரும் அங்குள்ள தலதா மாளிகையுமாகும். வருடாந்தம் பெரஹராவும் ஏனைய உற்சவங்களும் இடம்பெறுவதுடன் முக்கிய தீர்மானங்களிலும், நிகழ்வுகளிலும் செல்வாக்கு செலுத்தும் இடமாகவும் காணப்படுகின்றது.
இது ஓர் இனம் சார்ந்த மக்களின் முதுசம் அல்ல. மாறாக இத்தேசத்தில் வாழும் அனைத்து இன மக்களினதும் மரபார்ந்த இடமாகும். ஏனெனில், கண்டி தலதா மாளிகை எனும்போது பலரும் அதனை பௌத்தர்களின் புனித இடம் என்ற அடிப்படையில் மட்டுமே நோக்குகின்றனர். ஆனால், இலங்கையின் சுதந்திரத்திற்கு முந்திய காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் உருவாக்குவதற்காக அனைத்தின சுதந்திரப் போராளிகளும் ஒன்றிணைந்து போராடிய ஒரு முக்கிய இடமாகவும், இன உறவுக்கான பல வரலாற்றுச் சம்பவங்கள் இடம்பெற்ற இடமாகவும், கண்டியும் அங்கு அமைந்துள்ள தலதாமாளிகையும் முக்கியம்பெறுகின்றன. இந்த வகையில் கண்டிய முஸ்லிம் மக்களுக்கும், இப்பிரதேசத்தின் சிங்கள பிரதான பன்சலைகளுக்கும் இருந்த இணைப்பின் ஒருசில பகுதிகளை இப்பதிவு ஆராய்கின்றது..
கண்டியின் அமைவிடம்
இந்நகர் "மலைகளின் நகராக" இருப்பதனால் இதன் பாதுகாப்பு சிறப்பானதாக இருப்பினும், இப்பிரதேசத்திலிருந்து நாட்டின் ஏனைய பிரதேசங்களுடனான தொடர்பு மிகக் கடினமானதாக இருந்தது.
மன்னர்களின் காலத்தில், மத்திய பிரதேசமான கண்டியின் உற்பத்திகளை, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான பிரதான போக்குவரத்து "தவலம" என்ற பெயரில் முஸ்லிம்களிடமே இருந்துள்ளது மட்டுமல்ல, பிரதேசத்திற்குத் தேவையான உடுபொருட்கள்., கருவாடு, உப்பு போன்ற பொருட்களையும் நாட்டின் கரையோரங்களிலிருந்து கொண்டு வந்து தேவையான இடங்களிற்கு சேர்த்த பணியையும், முஸ்லிம் வர்த்தகர்களே மேற்கொண்டு உதவியுள்ளனர்.
சமய உறவு நிலை
கண்டி பெரஹராவின் போதும், ஏனைய நாட்களிலும். விகாரைகளுக்கான உப்பு, தேங்காய் மற்றும், ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வணிக ரீதியிலும் நன்கொடையாகவும், முஸ்லிம்கள் வழங்கி வந்துள்ளனர். மட்டுமல்ல, அக்கால விகாரைகளுக்குப் பொறுப்பான பிக்குகளுடன் சிறந்த உறவினையும் கொண்டிருந்தனர்,
சிங்கள வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி தலதா மாளிகையின் "தெப்ப குளக்கட்டுமானப் பணிகளை தேவேந்திர மூலாச்சாரி மேற்கொண்டபோது, அதனை சிறப்பாக முடித்தது முஸ்லிம் ஒப்பந்தக்காரர் ஒருவரே என்ற வரலாற்று வாய்வழிக் கதைகளும் உண்டு. அதேபோல் பெரஹராவுக்கான யானை கிழக்கு மாகாண ஏறாவூரை சேர்ந்த பணிக்கனாராலேயே வழங்கப்பட்டிருக்கின்றது. அதற்கான ஆதாரமாக அந்த யானையும் அவைபற்றிய தமிழ் குறிப்புக்களும், இன்றும் மாளிகாவையின் மேற்குப் புறத்தேயுள்ள தனிக் கட்டடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் கண்டி உடுநுவரப் பிரதேசத்திலுள்ள "எம்பக்க" தேவாலயத்தின் நிர்மாணம், அதன் நிர்வாகப் பராமரிப்பு, பெரஹரா போன்ற பல பணிகளில் முஸ்லிம் தலைவர்களும், மக்களும் அதிக பங்களிப்பை வழங்கி வந்திருக்கின்றனர். தொடர்புகளை நினைவுபடுத்துமுகமாக அக்கால அரசர்களால் பல பரிசுப் பொருட்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டுள்ளன,
உதாரணமாக, புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் பெரஹரா தேவைகளுக்கு தேங்காய் மற்றும் கொப்பறா, மட்டை போன்றவற்றை வழங்கியதற்காக செனரத் மன்னனால் வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்தை புத்தளம் பெரிய பள்ளியில் இன்றும் காணமுடியும்.
அதேபோல் அரச மாளிகையில் இடம்பெற்ற விருந்துகளுக்கான பிரதான சமையற்காரர்களாகவும், கணக்கறிக்கை எழுதும் கணக்காளர்களாகவும், பிரதான அரச மருத்துவர்களாகவும் முஸ்லிம்களே நியமிக்கப்பட்டிருந்ததாக, தலதா மாளிகையில் உள்ள ஓலைச் சுவடிகளிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நூலகத்திலுள்ள சுவடிகளிலும் குறிப்புகள் காணப்படுகின்றன.
காணிப் பரிமாற்றம்
மன்னர்கள் காலத்தில் நிலம் தொடர்பான அணுகுமுறையும், பங்கீடும் பிரதான வழிகளில் காணப்பட்டன,
1. கபடாகம
2.தேவாலகம
3. நிந்தகம
இந்தவகையறைக்கு ஏற்பவே நிலங்கள் பிரித்து வழங்கப்பட்டன. அதன்படி நிலத்தினைப் பெற்றவர்கள், பன்சலைக்கும், மன்னனுக்கும் விசுவாசமாகவும், சில தெரிவுசெய்யப்பட்ட பணிகளைப் புரிவோராகவும் இருக்குமாறும் கட்டளை இடப்பட்டிருந்தது, கட்டளைப்படியும், தமது விருப்பின்படியும் அங்கு வாழ்ந்த மக்கள் அக்கடமைகளை நிறைவேற்றினர்.
நம்பிக்கையும் விசுவாசமும்
கீர்த்திஸ்ரீ ராஜசிங்க மன்னனின் ஆட்சிக்காலத்தில், மன்னனை அரசாட்சியிலிருந்து வீழ்த்துவதற்கான சதித்திட்டத்தை உள்ளூர் புரட்சிக்காரர்களுடன் இணைந்து பிக்குமார் மேற்கொள்ளத் தீர்மானித்தனர், அதன்படி மல்வத்து விகாரையில் இடம்பெறும் பூஜைக்கு அரசனை பிரதம அதிதியாக அழைத்து, அவன் அமரும் ஆசனத்தின் கீழே ஒரு குழியைத் தோண்டி வீழ்த்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டது. குறித்த நிகழ்வுக்கு அரசன் வருகைதரும் போது வழியில் அவனைச் சந்தித்து சதித்திட்டம் தொடர்பாக விளக்கிக்கூறி அவனை அதிலிருந்து காப்பாற்றியது, 'கோபால முதலியார்' என்ற இந்திய வழி முஸ்லிம் அதிகாரம் என்ற குறிப்புக்களும் உள்ளன. பின்னர் அரசன் அதற்கான நன்றிக்கடனாக பல பிரதேசங்களை வழங்கியதாகவும் கூறப்படுகின்றது.
ஆதாரங்களுக்கான சான்றுகள்
இதுதொடர்பான வரலாற்று ஆதாரங்களின் ஒருசில விபரங்களை "ஸ்ரீ ராஜாதி ராஜசிங்க" (1782- – 1798) மன்னனின் ஆசானாகவும், ஆலோசகராகவுமிருந்து அவனை வழிநடத்திய " மொறத்தொட்ட தம்ம கந்ததேரர்" அக்காலத்தில் அன்றாடம் தாம் எழுதி வைத்திருந்த "டயறிக் குறிப்புக்கள்" இக்குறிப்புக்களின் ஒரு பகுதி பின்னர் நூலாகவும் சிங்கள எழுத்தாளர் டயகம என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது...
இதன்படி அக்காலத்தில் கொலஸ்டல என அழைக்கப்பட்ட மஹியங்கன மற்றும் தெல்தெனிய மரக்கல மினிஸ்ஸு, பன்சல வுக்கு உப்பு தருவதாகவும், பன்சலவுக்கு சொந்தமான காணிகளையும், பயிர்களையும் பாதுகாத்து தந்ததாகவும் தனது குறிப்புக்களில் குறிப்பிடுகின்றார்..
இன்னும் பங்கொல்ல மடம் என்ற இடத்தில் வாழ்ந்த 'மரக்கல மினிஸ்ஸு' அதாவது, அங்கு வாழ்ந்த குடும்பங்கள் வருடத்திற்கு 18 வெள்ளிகளை வழங்கியதாகவும், பன்சலவுக்கு வந்து தமது பிரச்சினைகளையும், அறிக்கைகளையும் தெரிவித்ததாகவும், பன்சலைக்குத் தேவையான அரிய பொருட்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் கொண்டு வந்ததாகவும் அவரது குறிப்புக்கள் கூறுகின்றன,
மொறத்தொட்ட தம்மகந்த தேரர், பௌத்த மல்வத்த நிகாய பிரிவின் மகாநாயக்கராகவும் இருந்தவர் மட்டுமல்ல, அக்கால முஸ்லிம்களுக்கும் இவருக்கும் இடையேயான தொடர்புகளும் மிக நெருக்கமாக இருந்துள்ளன
ஒருமைப்பாட்டிற்கான இடம்
உண்மையில் தலதா மாளிகையும் அதனோடு தொடர்பான இலங்கையின் வரலாற்றையும், நாம் அறியவேண்டிய கட்டாய கடமை உள்ளது. அங்கு சமய ரீதியான செயற்பாடுகள் இடம்பெற்றாலும் அதைவிட அங்குள்ள வரலாற்று அம்சங்கள் மிக முக்கியமானவை,
அங்குள்ள "கெப்பட்டிபொல" வரலாறானது, இலங்கையில் சிங்களப் புரட்சியின் ஊடாக காலனித்துவத்தையும், அதற்கு சார்பான ஆட்சியாளர்களையும் எதிர்த்துப் போராடி உயிர்நீத்த இடம் நினைவிடமாக கட்டப்பட்டுள்ளது. அதேபோல எஹலப்பொலவின் இரண்டாவது மகனான சிறுவன் மத்தும பண்டார தனது குடும்பத்தை கொல்வதற்காக அழைத்துவந்த வேளையில் பலர் தப்பியோட முயற்சிக்கையில் தான் முன்வந்து தனது உயிரை வழங்கி வீரனாக உயிர்நீத்த வரலாறும், அங்கு காணப்படும் வாரியப்பொல சுமங்கள தேரரின் நினைவுச்சிலை பிரிட்டிஷ் - சிங்கள ஒப்பந்தத்திற்கு முன்னரே இலங்கையின் சுதேச கொடி இறக்கப்பட்டதை எதிர்த்து பிரிட்டிஷ் கொடியை பலவந்தமாக இறக்கிய வரலாற்று நிகழ்வுகளையும் குறிக்கும் ஞாபகச் சின்னங்களாக உள்ளன.
இத்தியாகங்கள் ஒரு சமூகத்திற்கானவை மட்டுமல்ல, மாறாக அவை முழுத்தேசத்தின் சுதந்திரத்திற்கானவை.
தலதா மாளிகையின் உள்ளே காணப்படும் சித்திர வேலைப்பாடுகளும், அங்குள்ள தொல்பொருள் கட்டிடமும், அங்குள்ள பொருட்களும், எமது முன்னோர் இத்தேசத்திற்கு ஆற்றிய தேசப்பங்களிப்பையும், ஒருமைப்பாட்டையும் குறித்து நிற்கின்றன.
ஆனால், இவ்வாறான தேச விடுதலைக்கான பங்களிப்பையும், சமூகப் போராட்டங்களையும் பற்றி அறிவதிலும் அவற்றை எமது எதிர்கால சந்ததியினருக்கு எத்திவைக்கவும் ஆர்வமில்லாமல் இருக்கிறோம். அத்துடன், ஒரு சமூகத்திற்கான சமய இடம் என ஒதுக்கிவிட்டு, அவற்றை சமயக் கண்கொண்டு மட்டுமே நோக்குவதும் இன்னும் இவற்றில் ஆர்வமின்றி இன்றைய முஸ்லிம்கள் தூரத்தே இருப்பதும், நாட்டில் ஏற்படும் சகிப்புத் தன்மையற்ற நிலைக்கும் முறுகலுக்குமான முக்கிய காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது,
செய்ய வேண்டியவை
இந்த வகையில் நாட்டின் தேசிய வரலாற்றை பாதுகாக்கவும், அதில் எமது முன்னோர் செய்த புராதனகால பங்களிப்பை இன்றும் நினைவுபடுத்தவும், அவ்வாறான இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு அதன்மூலம் இன உறவைப் பேணவும், பெரஹரா போன்ற தேசிய நிகழ்வுகளில் முஸ்லிம்கள் தமது பங்களிப்புக்களையும், பங்குபற்றுதல்களையும், அதிகரித்து உறவுக்கான பங்களிப்பினை செய்ய வேண்டியதும், இத்தேசத்தின் ஒருமித்த வரலாற்று நிகழ்வுகளில் தாமும் கலந்துகொண்டு பெருமை கொள்வதும் காலத்தின் கடமையாகவே கருத வேண்டியுள்ளது,
இவ்வாறான நல்லிணக்க நடைமுறைகளே காலம் காலமான இனவொற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கான நிலையான செயற்றிட்டமாக அமையுமே தவிர கலவரங்களின்போது மட்டும் இடம்பெறும் தற்காலிக பேச்சுவார்த்தைகள் எந்தவித நிரந்தரத் தீர்வுகளை தரப் போவதில்லை என்பதே என்போன்ற பலரின் பொதுவான அபிப்பிராயமாகும்.
-Vidivelli
