புனித துல்ஹஜ் மாதத்தை நாம் அடையவிருக்கின்ற நிலையில் அதில் உழ்ஹிய்யா அமலை நிறைவேற்றுவதற்கான தயார்படுத்தல்கள் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்று வருகின்றன. தனியாகவும் கூட்டாகவும் இதனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றும்போது நாட்டின் சட்டத்தை மதித்து நடக்குமாறும் பல்லினங்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வுகள் தூண்டப்படும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது எனவும் இலங்கை முஸ்லிம்களுக்கு சமூக அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.
ஷரீஆ சட்டங்களை மதியாது எம்மவர்கள் உழ்ஹிய்யா விடயத்தில் நடந்து கொள்வதும், நாட்டுச் சட்டங்களை துஷ்பிரயோகம் செய்வதும் கவலைக்குரியதாகும். கடந்த காலங்களில் மிகவும் நெருக்கமாக அடைக்கப்பட்டு வாகனங்களில் மிருகங்கள் உழ்ஹிய்யாவுக்காக ஏற்றி வரப்பட்டமையும் உரிய அனுமதிப்பத்திரங்களின்றி மிருகங்கள் கொண்டு செல்லப்பட்டமையும் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்கள் பல பதிவாகி சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருந்ததை இந்த இடத்தில் ஞாபகமூட்ட விரும்புகிறோம்.
உழ்ஹிய்யாவைக் காரணமாகக் காட்டி நாட்டில் மாடறுப்பதைத் தடை செய்ய வேண்டும் என பௌத்த கடும்போக்கு சக்திகள் தொடராக போர்க் கொடி தூக்கி வருகின்றன. இவ்வாறானவர்களின் கோரிக்கைகளை நியாயப்படுத்துமளவுக்கு நமது செயற்பாடுகள் ஒருபோதும் அமைந்துவிடக் கூடாது.
குறிப்பாக உழ்ஹிய்யாவை நாட்டின் சட்ட திட்டங்கள், விதிமுறைகளுக்கமைய நிறைவேற்ற வேண்டும். உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை கொள்வனவு செய்யும்போதும் அவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போதும் உரிய அத்தாட்சிப் பத்திரங்களைப் பெற்றிருத்தல், மிருகங்களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்துதல், வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவுக்கேற்ப பிராணிகளை வாகனத்தில் ஏற்றுதல், உழ்ஹிய்யாவுக்குப் பொருத்தமான இடம், நேரம் என்பவற்றை தீர்மானித்துக் கொள்ளுதல், குர்பான் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பிரசுரிப்பதைத் தவிர்த்துக் கொள்ளல், அவ்வப் பிரதேச நிலைவரங்களைக் கவனத்திற் கொண்டு பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஆலோசனைகளைப் பெற்று தனியாகவோ அல்லது கூட்டாகவோ உழ்ஹிய்யாவை நிறைவேற்றுதல், குர்பான் செய்யப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை பொறுப்புணர்வுடன், உரிய முறையில் புதைப்பது முதலான விடயங்களில் முஸ்லிம் சமூகம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக பல்லினங்களோடு வாழும் நாம், பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படப்படும் வகையிலோ நடந்து கொள்ளவே கூடாது. போயா தினத்தன்று பிராணிகளை அறுப்பதை முற்றாகத் தவிர்ந்து கொள்வதும் பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யாவை முறையாக நிறைவேற்றுவதும் மிகவும் அவசியமாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli
