இந்தியாவைச் சேர்ந்த பிரபல மத போதகரும் இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி ஸாகிர் நாய்க்கிற்கு சொந்தமான இரு தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு பிரித்தானிய தொலைக்காட்சி ஒழுங்குபடுத்தல் அமைப்பான ஒவ்கொம் (Ofcom) 3 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 6.85 கோடி இலங்கை ரூபா, 2.76 கோடி இந்திய ரூபா) அபராதம் விதித்துள்ளது.
வெறுப்புணர்வைத் தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய குற்றச்சாட்டிலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கலாநிதி ஸாகிர் நாய்க்கின் பீஸ் ரீவி, (Peace TV) உருது அலைவரிசைக்கு 2 லட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்களும் பீஸ் ரீவி ஆங்கில அலைவரிசைக்கு ஒரு இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்களும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு அலைவரிசைகளும் வெறுப்புப் பேச்சு அடங்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதாகவும், ஒரு சந்தர்ப்பத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சி வன்முறையை தூண்டக்கூடியதாக இருந்தது எனவும் ஒவ்கொம் தெரிவித்துள்ளது.
54 வயதான கலாநிதி ஸாகிர் நாய்க், (சாகிர் நாய்க், சாகிர் நாயிக்) பயங்கரவா குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றசாட்டுகளுக்காக தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மலேஷாவில் நிரந்த வதிவிட உரிமையை அவர் பெற்றுள்ளார். எனினும், மலேஷியாவில் பகிரங்க சொற்பொழிவாற்றுவதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
