(எம்.எப்.எம்.பஸீர்)
ஐக்கிய நாடுகள் சபையில் பல வருடங்களாக பட்டய பொறியியலாளராக கடமையாற்றிய, உலக வங்கியின் இலங்கை கிளையின் முன்னாள் தொழில்நுட்ப பொறியியலாளரான வீரபத்தராலலாகே சமன் விஜேசிறி (63) கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் களப்பு ஒன்றினுள் மறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சிஐடி விடயங்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.
மூன்று வருடங்களின் பின்னர், இந்த குற்றச் செயல் தொடர்பில் சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு விடயங்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ள நிலையில், கொல்லப்பட்டவரின் உறவினர் ஒருவர் உட்பட மூவரை அவர்கள் கைது செய்துள்ளனர்.
குறித்த மூவரும் சிலாபம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இததாலியிலிருந்து இலங்கை திரும்பிய வர்த்தகர் என கூறப்படும் பெராஜ் லிங்கன், வர்த்தகரான ருவன் சந்தன, கொல்லப்பட்ட பொறியியலாளரின் உறவினரான நிஹால் தேவப்பிரிய ஆகியோரே சிஐ.டி.யால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபர்களாவர். இந்நிலையில் சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விசாரணைகளின் போது, கொல்லப்பட்ட வர்த்தகர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக நம்பவைக்கும் படியாக, விமான நிலைய தரவுக் கட்டமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தமை சிஐடி விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் , சமன் விஜேசிறி எனும் குறித்த கோடீஸ்வர பொறியியலாளர், கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் சிலாபம் களப்பில் மூழ்கடிக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளதாக சிஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும் சி.ஐ.டி. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
சிலாபம், காக்கை பள்ளி – இதிகொடவிலவைச் சேர்ந்த பொறியியலாளரான சமன் விஜேசிறி கணாமல் போயுள்ளதாக, கடந்த 2018 செப்டம்பர் 18 ஆம் திகதி, அவரது தோட்டத்தின் பாதுகாப்பு ஊழியர் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்திருந்தார்.
metro news

0 கருத்துகள்