
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிறிதேனும் அரசியல்
அனுபவம் இல்லை. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே சிறந்த அரசியல் அனுபவம் உள்ளது. நாட்டை முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதி எவ்வளவு முயற்சி செய்தாலும் அரசியல் அனுபவமில்லாததால் அது சாத்தியமற்றது. ஆகவே, ஜனாதிபதி தன்னுடைய பதவியிலிருக்கும் அதேவேளை, அரசாங்கத்தின் ஆட்சி மற்றும் நிர்வாக அதிகாரத்தை பிரதமருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
~தமிழன் வார இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நேர்காணல்:- யோ.தர்மராஜ்
அவரின் முழு செவ்வியும் வருமாறு,
கேள்வி: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு முன்னின்று செயற்பட்ட நீங்களே அரசாங்கத்தை விமர்சிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்னவாயிற்று?
பதில் : அரசாங்கத்தை நாங்கள் விமர்சிக்கவில்லை. கடந்தஅரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்தமையினாலேயே தற்போதைய அரசாங்கத்தை கொண்டுவந்தோம். எனினும், கடந்த அரசாங்கத்திற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் சிறு வித்தியாசத்தைக் கூட எங்களால் பார்க்க முடியவில்லை. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு கொரோனாவை காரணமாகக் கூறுவதற்கு தயாராக இருக்கின்றனர். ஆனால், மக்கள் மத்தியில் இந்த அரசாங்கத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அரசாங்கத்திலுள்ள குறைபாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டுவது அரசாங்கத்தை மாற்றுவதற்கல்ல. மாறாக, தவறுகளை திருத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாகவுள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு உதவிசெய்தது போன்று அரசாங்கத்தில் ஏற்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு எங்களுக்கு பூரண அதிகாரமுள்ளது. அதன்படியே நாங்கள் செயற்படுகின்றோம். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் சொத்துகளை வெளிநாடுகளுக்கு கொடுக்கமாட்டோம் என்றனர். ஆனால், இன்று அது தலைகீழாகவே நடைபெறுகிறது.
இதனால் மக்கள் மத்தியிலும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றைக் காரணம் காட்டி பொருட்களின் விலையை அதிகரித்துள்ளனர். ஆனால், அதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், சரியானவர்கள் இந்த அரசாங்கத்தில் இல்லை. வேலைகள் செய்வதற்கு யாருமில்லை. முறையான நிர்வாகமுமில்லை, ஆலோசனை வழங்குவோரும் தவறான ஆலோசனைகளையே வழங்குகின்றனர். இதனாலேயே மக்கள் பெரும் அதிருப்தியிலுள்ளனர். மக்கள் மத்தியில் யாருக்கும் அதிருப்தி ஏற்பட்டால் அவர்களால் முன்னோக்கிச் செல்லமுடியாது.
மக்களே அனைவருக்கும் முக்கியமானவர்கள். உரிய திட்டமில்லாது சேதனப் பசளைத் திட்டத்தை முன்னெடுத்து விவசாயிகளை தவிக்கவிட்டுள்ளனர். முறையான திட்டங்களை முன்வைத்த பின்னரே எதனையும் செய்யவேண்டும். ஆனால், அவ்வாறில்லாது பல பொய்யான வேலைத்திட்டங்கள் இந்த அரசாங்கத்தில் உள்ளது.
கேள்வி : அரசாங்கத்திலுள்ள தவறுகளால் ஆட்சி அதிகாரத்தை பிரதமர் பதவியேற்க வேண்டும் எனக் கூறியுள்ளீர்கள். அவ்வாறாயின் ஜனாதிபதியை பதவி விலகவேண்டும் என்றா கூறுகின்றீர்கள்?
பதில் : ஜனாதிபதி பதவி விலக வேண்டிய தேவையில்லை. ஜனாதிபதி தன் பதவியில் இருக்கும் அதேவேளை, நாட்டை ஆட்சிசெய்யும் அதிகாரத்தை பிரதமர் பொறுப்பேற்க வேண்டும். ஜனாதிபதிக்கு அரசியல் அனுபவமே இல்லை. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே சிறந்த அரசியல் அனுபவமுள்ளது.
நாட்டை முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதி எவ்வளவு முயற்சி செய்தாலும் அரசியல் அனுபவமில்லாததால் அது சாத்தியமற்றது. ஆகவே, ஜனாதிபதி தன்னுடைய பதவியிலிருக்கும் அதேவேளை, அரசாங்கத்தின் ஆட்சி மற்றும் நிர்வாக அதிகாரத்தை பிரதமருக்கு வழங்கவேண்டும்.
கேள்வி: நீங்கள் கூறுவது போன்று பிரதமருக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு 20ஆவது திருத்தம் இடமளிக்காதே?
பதில் : 20ஆவது திருத்தத்தினாலேயே நாடு இன்று சீர்குலைந்துள்ளது. அண்ணா பிரதமராக இருக்கும்போது, தம்பியிடம் ஆட்சி அதிகாரம் இருக்கின்றது. இந்த அதிகாரத்தை அண்ணாவும் தம்பியும் பகிர்ந்துகொண்டு செயற்பட முடியும்.
கேள்வி : அவ்வாறு அதிகாரத்தை பகிரும்போது அது அரசியலமைப்பை மீறும் செயற்பாடாக அமையுமல்லவா?
பதில் : அரசியலமைப்பை தற்போது எங்களால் மாற்றமுடியாது. ஆனால், 23 பலத்தைக்கொண்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு அரசியலமைப்பை மாற்றியமைக்கும் அதிகாரமும் இருக்கின்றது.கடந்த ஆட்சியில் ஜனாதிபதி மைத்ரியும் பிரதமர் ரணிலும் இருவேறு பக்கத்திற்குச் சென்றமையினாலேயே பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், தற்போது அண்ணாவும் தம்பியும் அதிகாரத்தில் இருக்கும்போது இருவேறு பக்கத்திற்குச் செல்ல வாய்ப்பில்லை.
நிர்வாக மற்றும் ஆட்சி அதிகாரத்தை பிரதமரிடம் கொடுத்துவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட முடியும். இதனால் எவ்வித பாதிப்பு ஏற்படாது.
0 கருத்துகள்