இலங்கையை இலகுவாக வீழ்த்திய சிரியா



(எம்.எம்.சில்வெஸ்டர்)


இலங்கை மற்றும் சிரிய அணிகள் மோதிக் கொண்ட 23 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்புக்கான தகுதிகாண் போட்டியில் இலங்கை அணியை 5 க்கு 0 என்ற கணக்கில் சிரிய அணி இலகுவாக வென்றது.


23 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்தாட்ட கிண்ணத்துக்கான தகுதிகாண் சுற்றின் குழு ஏ க்கான போட்டிகள் கட்டாரின் தோஹாவில் நடைபெற்று வருகிறது. கட்டார், யேமன், சிரியா ஆகிய நாடுகளுடன் இலங்கை குழு ஏ யில் அங்கம் வகிக்கிறது.


இந்நிலையில், நேற்று ஆரம்பமான இப்போட்டித் தொடரில் இலங்கை அணி சிரிய அணியை எதிர்த்தாடியாது.


போட்டியின் முதலாவது நிமிடத்திலேயே, அதாவது போட்டி ஆரம்பமான 15 ஆவது செக்கனிலேயே சிரயா தனது முதலாவது கோலைப் போட்டது.


போட்டியின் ஆரம்பம் முதலே பந்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சிரியா முதல் பாதியில் 3 க்கு 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.


இரண்டாம் பாதியிலும் இலங்கை வீரர்கள் சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக விளையாடவில்லை. இலங்கை வீரர்கள் தடுப்பாட்ட உத்தியை பயன்படுத்தியிருந்தாலும், சிரிய வீரர்களை கட்டுப்படுத்த முடியாது தவித்தனர். இரண்டாம் பாதியிலும் சிரிய அணியினர் இரண்டு கோல்கலைப் போட்டு போட்டியின் முழு நேர முடிவில் 5 க்கு 0 என்ற கோல் கணக்கில் வென்றது.


இதேவேளை, இப்போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட கட்டார் மற்றும் யேமன் கால்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் கட்டார் அணி 3 க்கு 0 என்ற கணக்கில் யேமன் அணியை வீழ்த்தியது.


எதிர்வரும் 28 ஆம் திகதியன்று நடைபெறும் முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் கட்டார் அணிகளும் இரண்டாவது போட்டியில் யேமன் மற்றும் சிரிய அணிகள் மோதிக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்