பிரதமர் மஹிந்த சுய சிந்தனையில் உள்ளாரா, இல்லையா என்பது சந்தேகத்துக்கிடமானது! -ஒலகன்வத்தே சந்திரசிறி தேரர்


பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ உட்பட அமைச்சரவை முழுமையாக பதவி விலக வேண்டும். இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து நாட்டு மக்கள் எதிர்க கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு நாடாளுமன்ற மட்டத்தில் தீர்வு காண வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரம் முழுமையாக குறைக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் ஒலகன்வத்தே சந்திரசிறி தேரர் தெரிவித்தார்.


இடைக்கால அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவிக்காவிடின் சகல அரசியல் கட்சிகளையும் புறக்கணித்து, மகாநாயக்க தேரர்களையும், மகாசங்கத்தினரையும் ஒன்றிணைத்து சங்க மஹா பிரகடனத்தை நாட்டுக்கு அறிவிப்போம் என்றும் பேராசிரியர் ஒலகன்வத்தே சந்திரசிறி தேரர் சுட்டிக்காட்டினார்.

நாடளாவிய ரீதியில் உள்ள 12,000 விஹாரைகளிலிருந்து சுமார் 6,000 பௌத்த தேரர்கள் நேற்று (30) சனிக்கிழமை கொழும்பு பௌத்த மகா சம்மேளன சபையிலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கம் வரை பேரணியாக சென்றனர். பின்னர் சுதந்திர சதுக்கத்தில் சங்க மகா பிரகடனத்துக்கான மகா மாநாடு இடம்பெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் ஒலகன்வத்தே சந்திரசிறி தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் , பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ சுய சிந்தனையில் உள்ளாரா, இல்லையா என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது. நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் மக்கள் நாடுதழுவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.


அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடாதவர்களை காண்பது ஆச்சரியமாகவே உள்ளது. ஒரு குடும்பத்தின் அதிகார போராட்டத்துக்கு நாட்டை பலிகொடுக்க முடியாது. ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் எவருக்கும் நம்பிக்கை கிடையாது. மக்களின் நம்பிக்கை இல்லாதொழிந்தால் அதனை மீள கட்டியெழுப்புவது சாத்தியமற்றது. என்றுமில்லாதளவுக்கு மக்கள் அரசாங்கத்தையும், அரசியல் கட்டமைப்பையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்றார்.