மஹிந்தவின் செயற்பாடு 'யானை தன் தலையில் தானே மண்ணையள்ளி போட்டுக் கொண்டதற்கு' ஒப்பானது - வாசுதேவ நாணயக்கார
(இராஜதுரை ஹஷான்)


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு 'யானை தன் தலையில் தானே மண்ணையள்ளி போட்டுக் கொண்டதற்கு' ஒப்பானது. சகோதரர்களின் கருத்திற்கு முன்னுரிமை வழங்காமல் நாட்டு மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்திருந்தால் நாடு தற்போது இவ்வாறான அவலநிலையை எதிர்க்கொண்டிருக்காது என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் தற்போது 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கடுமையாக விமர்சிப்பதுடன், தாக்குதல்களையும் முன்னெடுக்கிறார்கள்.


அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 3 ஆம் திகதி முழு அமைச்சரவையும் பதவி விலகியதுடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அப்போதே பதவி விலகியிருந்தால் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் சற்று தணிந்திருக்கும்.


பிரதமர் பதவியில் இருந்து விலகாமல் மாற்று வழிமுறையில் பதவியை தக்க வைத்துக் கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.


நேற்றுமுன்தினம் அலரி மாளிகைக்கு பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்ளை அழைத்து அவர்களை தூண்டிவிட்டு காலி முகத்திடல் அமைதிவழி போராட்டக்காரர்கள் மீது மிலேட்சத்தனமான முறையில் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


நாட்டில் பாரிய அழிவு ஏற்பட்டதை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். இவரது செயற்பாடு 'யானை தன் தலையில் மீது தானே மண்ணையள்ளி போட்டுக் கொண்டதற்கு ஒப்பானதாக அமைந்துள்ளது' சமகால அரசியல் ஸ்தீரத்தன்மை நிலைமைக்கு பாராளுமன்ற மட்டத்தில் தீர்வு பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என்றார்.