ஜனாதிபதிக்கு மீண்டும் கடிதம் அனுப்பிய சஜித்!எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.


பிரதமர் பதவியை தாம் பொறுப்பேற்க தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரினால் நேற்று (12) ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.


எனினும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான தனது தீர்மானத்தை ஒருபோதும் மாற்ற போவதில்லை என ஜனாதிபதி பதில் கடிதம் மூலம் எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், இதற்கு பதில் வழங்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


இதில், பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தாம் நேற்றைய நாளில் முதன் முதலாக அறிவித்ததாக ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமை முற்றிலும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலில் பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது தாம் அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கவில்லை என்றும், ஜனாதிபதியின் அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னரே இறுதி தீர்மானத்தை அறிவிப்பதாக தான் தெரிவித்திருந்ததாக சஜித் பிரேமதாச தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சு பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.