சம்பளம் வேண்டாம்; நிந்தவூர் பிரதேச சபையில் தீர்மானம்..!

 
(ஏ.எல்.எம்.சலீம், பாறுக் ஷிஹான்)


நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அவலங்களைக் கருத்திற் கொண்டு, நிந்தவூர் பிரதேச சபையின் சகல உறுப்பினர்களும், தமது மாதாந்த கொடுப்பனவை (அலவன்ஸ்) விட்டுக்கொடுப்பதற்கு முன்வந்துள்ளனர்.


கிழக்கிலுள்ள முக்கிய உள்ளுராட்சி சபைகளுள் ஒன்றான நிந்தவூர் பிரதேச சபையின் மக்கள் பிரதி நிதிகளான சபை உறுப்பினர்களே தமது மாதாந்த கொடுப்பனவைப் பெறாது தமது மக்கள் சேவையைத் தொடர்வதற்குத் தீர்மானித்துள்ளனர்.


சபையின் ஆட்சி அதிகாரத்திலிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஐ.தே.க), சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய மூன்று கட்சிகள் சார்ந்த உறுப்பினர்களும் இது தொடர்பான ஏகோபித்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.


நேற்று முன்தினம் வியாழன் நடைபெற்ற சபையின் ஐம்பதாவது மாதாந்த கூட்ட அமர்வில் சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் மேற்படி தீர்மானத்திற்கான ஆலோசனையை முன்வைத்தார்.


இதன்படி நீடிக்கப்பட்ட சபையின் ஆட்சிக்காலம் முடியும் வரையும் தவிசாளர், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை (அலவன்ஸ்) நாட்டு நிலமைகருதி விட்டுக்கொடுத்து, கொடுப்பனவின்றியே தமது சபை மூலமான மக்கள் சேவையைத் தொடர்வதென உறுப்பினர்கள் ஏகமனதான தீர்மானத்தை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.


மேலும் தமது தீர்மானம் தொடர்பில் பிரதமரும், நிதி அமைச்சருமான ரணில் விக்கிரம சிங்கவின் கவனத்திற்குக் கொண்டு வருவதுடன்

நாட்டிலுள்ள ஏனைய சகல உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களதும் ககவனத்திற்கு இந்த முன்மாதிரி செயற்பாட்டைக் கொண்டுவர ஆவன செய்யுமாறு கோருவதெனவும் சபை அமர்வில் முடிவு செய்யப்பட்டது.


பொருளாதார பிரச்சினை, அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்கள் மக்களிற்கு  ஆதரவாக சபை அமர்வின் போது  தவிசாளர் உட்பட  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 6 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் 6 உறுப்பினர்கள், 01 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளருமான வை.எல்.சுலைமாலெப்பையும்  இணைந்து  தவிசாளரின் முடிவிற்கு ஏகமனதாக ஆதரவினை தெரிவித்து தத்தமது  மாதாந்த கொடுப்பனவினை நாட்டின் பொருளாதார பிரச்சினை தீர்க்கப்படும் வரை தியாகம் செய்வதாக  இதன்போது தீர்மானம் மேற்கொண்டனர்.


நாட்டின் நிலமை கருதி நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள் எடுத்துள்ள இந்த முன்மாதிரி செயற்பாடு பலதரப்பினரதும் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.