அட்டுலுகம சிறுமி கொலைச் சம்பவம் தொடர்பில் விரைவில் நீதி கிடைக்கும் – ஜனாதிபதி






பண்டாரகம – அட்டுலுகமவில் சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் கொல்லப்பட்ட சம்பவத்தில் விரைவில் நீதி கிடைக்கும் என தாம் உறுதியளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.

ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் கொல்லப்பட்டமை இதுவரையில் மர்மமாக உள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்கள் எவையும் இதுவரையில் கிடைக்கவில்லை.

எனினும் இன்று இடம்பெறுகின்ற மரண பரிசோதனையின் பின்னர் பல தகவல்கள் வெளியாகும் என விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

சிறுமியின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக தற்போது 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த பகுதியில் உள்ள பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

பண்டாரகம – அட்டுலுகமவை சேர்ந்த சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

9 வயதான குறித்த சிறுமி நேற்றுமுன்தினம் முதல் காணாமல் போயிருந்தார்.

நேற்று முன்தினம் முற்பகல் தமது வீட்டிலிருந்து 250 மீற்றர் தொலைவில் உள்ள கடைக்கு சென்ற குறித்த சிறுமி மீண்டும் வீடு திரும்பியிருக்கவில்லை.

பின்னர் அவரது பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடளித்தனர்.

பொலிஸாரால் சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதோடு அதிலிருந்து கடைக்கு சென்று சிறுமி வீடு திரும்பும் காட்சிகள் பெறப்பட்டன.

எனினும் சிறுமியின் வீட்டிலிருந்து 150 மீற்றர் தொலைவில் எந்த சி.சி.ரி.வி காணொளி காட்சிகளும் காணப்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இந்தநிலையில் நேற்று பிற்பகல் சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம், அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

பின்னர் ஹொரணை பதில் நீதவான் மற்றும் நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நீதவான் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து சிறுமியின் சடலம் மரண பரிசோதனைகளுக்காக பண்டாரகம வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்தநிலையில் இன்று மரண பரிசோதனை இடம்பெறவுள்ளது.