அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் வெற்றி கொள்வோம் - பிரசன்ன ரணதுங்க(இராஜதுரை ஹஷான்)


ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் அதனை சிறந்த முறையில் வெற்றி கொள்வோம். உரிய நேரத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்துவோம் என ஆளும் தரப்பின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.


அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் கடந்த மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றில் குறிப்பிட்டார்கள்.


நம்பிக்கையில்லா பிரேரணைக்கு உரிய எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் எதிர்தரப்பினர் முன்னெடுக்கவில்லை. நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஊடகங்களில் மாத்திரம் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.


ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இவ்வாரம் பாராளுமன்றில் கொண்டுவருவதாக குறிப்பிட்டுள்ளனர். நம்பிக்கையில்லா பிரேரணையை எம்மால் சிறந்த முறையில் வெற்றி கொள்ள முடியும்.


ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவிற்கு பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் உள்ளது என்பதை உரிய நேரத்தில் நிரூபிப்போம். பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்பதையும் உறுதியுடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.


ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டுவருவதாக எதிர்தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறான குற்றச்சாட்டுக்களின் நிமித்தம் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேணை கொண்டு வரப்படும் என்பது குறித்து எதிர்தரப்பினர் முதலில் தெளிவுபெற வேண்டும். அனைத்து சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிக்கொள்ள முடியும் என்றார்.