குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் இழுத்தடிக்கப்படும் ரிஷாத்தின் வழக்கு, நீதிபதி குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்துமாறு பொலிஸுக்கு உத்தரவு.


 ஆராய்ந்த பின், வெளிநாட்டு பயணத் தடைகள் தளர்ப்பு! 


ரிஷாத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாது விசாரணைகளை இழுத்துச் செல்வது நியாயமற்றது! சட்டத்தரணி சஹீட் நீதிமன்றில் தெரிவிப்பு


உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹிஷாலினி உடலில் தீ பரவி உயிரிழந்த சம்பவங்கள் குறித்த விசாரணைகளில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன.


கொழும்பு மற்றும் கோட்டை நீதிமன்றங்களால், நேற்றும் (25) நேற்று முன்தினமும் இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.


முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹிஷாலினி உடலில் தீ பரவி உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று முன்தினம் ( 24) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


இதன்போது அந்த விவகாரத்தில் சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்டு பிணையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவரது மனைவி உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றில் ஆஜராகினர்.


 


இதன்போது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்காக ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட், ரிஷாத் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை தளர்த்தப் கோரினார்.


தனது சேவை பெறுநர் சம்வம் இடம்பெறும்போது, விளக்கமறியலில் இருந்ததாகவும், அவருக்கு எதிராக குற்றம் சுமத்த சாட்சியங்கள் இல்லாத நிலையில், தொடர்ச்சியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாது விசாரணைகளை இழுத்துச் செல்வது நியாயமற்றது எனவும் சாட்சி இன்றேல் சந்தேக நபர்களை  விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வாதங்களை முன்வைத்தார்.


இந்நிலையில்,, சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதா என்பது தொடர்பில் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடி, அனைத்து விடயங்களையும் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிவான், ரிஷாத் பதியுதீனின் வெளிநாட்டு பயணத் தடையையும் நீக்கி உத்தரவிட்டார்.


இவ்வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.


இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளுக்கு என, கடந்த 2021 ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், 2021 ஒக்டோபர் 14 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்ட ரிஷாத் பதியுதீன் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.


இந்நிலையில் நேற்று (25) இந்த வழக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது ரிஷாத்தின் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அவரது வெளிநாட்டு பயணத் தடை  அடுத்த தவணை வரை தளர்த்தப்பட்டு உத்தரவிடப்பட்டது.