தங்களின் தனிப்பட்ட தீர்மானத்திற்கமைய 21 க்கு எதிராகவே வாக்களிப்பார்கள் - சாகர காரியவசம்


(இராஜதுரை ஹஷான்)


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் எதிர்வரும் நாட்களில் மறுசீரமைக்கப்படும். எத்தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை முன்வைக்கவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்வது தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.


கடந்த இரண்டு வருட காலமாக கொவிட்-19 பெருந்தொற்று வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியது. நாட்டில் கொவிட்-19 பெருந்தொற்று என்பதொன்று தாக்கம் செலுத்தியதையும், அக்காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடு முடக்கப்பட்டதையும், நிவாரணம் வழங்கியதையும் மக்கள் மறந்து விட்டார்கள். அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் ஒரு சிலர் செயற்பட்ட காரணத்தினால் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்தது.


பொருளாதார நெருக்கடியினை ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் அரசியல் நெருக்கடியாக்கி மக்களாணைக்கு முரனாண வகையில் தற்போது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.


நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளோம். மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு அரசாங்கம் இதுவரை முறையான தீர்வினை முன்வைக்கவில்லை.


அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலம் ஒரு தனி நபரை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் தங்களின் தனிப்பட்ட தீர்மானத்திற்கமைய 21ஆவது திருத்தத்திற்கு எதிராகவே வாக்களிப்பார்கள்.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் எதிர்வரும் நாட்களில் மறுசீரமைக்கப்படும். எத்தேர்தலை எதிர்க்கொள்ள தயாராகவுள்ளோம். தவறான சித்தரிப்புக்கள் தற்போதைய பிரச்சினைகளுக்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது. பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களில் பெரும்பாலானோரே தற்போது கட்சி எதிராக செயற்படுகிறார்கள் என்றார்.