கொழும்பு நீதிமன்ற தடை உத்தரவை அடுத்து, ரஷ்ய அரசுக்கு சொந்தமான விமானம் கட்டுநாயக்கவில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.


நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க

 சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மொஸ்கோ நோக்கிச் செல்லும் ரஷ்ய அரசுக்கு சொந்தமான ஏரோஃப்ளோட் விமானம் ஒன்றுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.


எனினும், விமானத்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


விமானத்தை குத்தகைக்கு எடுக்கும் நிறுவனத்துடன் ஏற்பட்ட வர்த்தக தகராறு காரணமாக விமானம் புறப்பட அனுமதிக்கப் படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இந்த விடயம் தொடர்பான தீர்வுக்காக சட்டமா அதிபருடன் (AG) கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


அயர்லாந்து நிறுவனமான செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் லிமிடெட் தாக்கல் செய்த முறைப்பாட்டினை விசாரித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதியினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த தடை உத்தரவு இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்.