மஹிந்த உட்பட பல அரசியல்வாதிகள் இதுவரையில் கடவுச்சீட்டை ஒப்படைக்கவில்லை


நீதிமன்ற உத்தரவுக்கு மத்தியிலும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அரசியல்வாதிகள் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பிலான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, ரேணுகா பெரேரா மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட பலர் இதுவரையில் தமது கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக அவர் நீதிமன்றில் தெரிவித்தார்.


இவர்களில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, ரேணுகா பெரேரா மற்றும் மஹிந்த கஹந்தகம ஆகியோர் தங்களுடைய கடவுச்சீட்டு தமது வீட்டில் வைத்து எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு பயணத் தடை விதித்து மே 12ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.