நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தம் – 03 ஆம் திகதி புதிய கூட்டத்தொடர் ஆரம்பம்!


9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் இன்று நள்ளிரவுடன் இடைநிறுத்தப்படவுள்ளது.இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.


நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தும் அதிகாரம் , அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அது தொடர்பில் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலில், அடுத்து சபை எப்போது கூடும் என்ற திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும்.


அந்த திகதி ஒரு மாதத்தை விஞ்சுதலாகாது.அந்தவகையில் ஓகஸ்ட் 03 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு சபை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவதற்கு கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி அண்மையில் அனுமதி கோரியிருந்தார். அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

 

நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டு, புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும்போது ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை இடம்பெற வேண்டும். ஜனாதிபதியே சம்பிரதாயப்பூர்வமாக சபை அமர்வை ஆரம்பித்து வைப்பார். அதேபோல நாடாளுமன்றத்தில் தற்போது இயங்கும் குழுக்கள் செயலிழக்கும். புதிய குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்.