ரயில்வே திணைக்களத்திற்கு நாளொன்றுக்கு 10 கோடி ரூபா நட்டம்

  

இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு இவ்வருடம் நாளொன்றுக்கு 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 


நீண்ட காலமாக புகையிரதச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், அதனுடன் ஒப்பிடுகையில் வருமானம் அதிகரிக்கவில்லை எனவும் திணைக்களத்தின் இழப்பு ஆச்சரியமளிக்கும் வகையில் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.


2021 ஆம் ஆண்டில் புகையிரத திணைக்களத்தின் வருமானம் 2.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, அந்த வருடத்தில் திணைக்களத்தின் மொத்த நட்டம் 34 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 


இந்த செய்தியாளர் மாநாட்டில், 2022ல் ரயில்வே சம்பளம் மற்றும் சம்பளத்திற்காக 07 பில்லியன் ரூபாவும், 2021ல் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக 2.7 பில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.