இவ்வளவு நடந்தும் பிரதமர் ரணில் இன்னும் பாடம் கற்கவில்லை ; சஜித்

ஊடகவியலாளர்களை இலக்காக் கொண்டு அவர்கள் மீது பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் நடத்திய கொடூரமான மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிததுள்ளார்.


விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.


குறித்த அறிக்கையில் கீழே...


*பிரதமர் ரணிலின் இல்லத்திற்கு முன்னால் ஊடகவியலாளர்களை இலக்காக் கொண்டு தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்*!


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக அரச வன்முறையைப் பயன்படுத்தி சிரச ஊடகவியலாளர்கள் நால்வரை இலக்காக் கொண்டு அவர்கள் மீது பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் நடத்திய கொடூரமான மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.


அது மட்டுமன்றி, தாக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைக் கூட விரட்டி விரட்டி தாக்கும் அளவுக்கு பாதுகாப்புப் படையினர் மனிதாபிமானமற்றவர்களாக மாறிவிட்டனர்.


மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை உறுதி செய்வதற்காக நாகரீகமான ஊடகப் பயன்பாட்டில் ஈடுபட்ட மற்றும் அது தொடர்பாக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஊடகவியலாளர்கள் குழுவொன்று குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டமை அதிகாரம் வாய்ந்த ஜனாதிபதியை நான்கு சுவர்களுக்குள் முடக்கி வீட்டுக்கு அனுப்பிய மக்கள் போராட்டத்திலிருந்து பிரதமர் இன்னும் பாடம் கற்கவில்லை என்பதையே இந்தக் கோழைத்தனமான தாக்குதல் உணர்த்துகிறது.


மக்கள் இறையாண்மை மக்களிடமே உள்ளது என்பதை முன்னெப்போதையும் விட அதிகமாக நிரூபிக்கப்படும் இச்சூழ்நிலையிலும் கூட இவ்வளவு கொடூரமாக நடந்துகொள்ள பாதுகாப்புப் படையினருக்கு பனிப்புரை வழங்கியது யார் என்பதும், சிரச ஊடகவியலாளர்களையே குறிவைத்து தாக்குதலை நடத்தும் தேவை யாருக்குள்ளது என்ற விடயத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.


உடனடியாக பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.


எந்தவொரு சக்திவாய்ந்த அதிகாரமும் மக்கள் சக்தியால் தோற்கடிக்கப்படும் என்பதை சட்டவிரோத பிரதமர் அறிந்திருக்க வேண்டும் என்பதோடு,நாடு அராஜக நிலைக்கு செல்ல வழிவகுக்காமல் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.