வீதிக்கு இறங்கிய ஆட்டோ ஓட்டுனர்கள் : அதிகாரிகளுக்கும் மகஜர் கையளிப்பு.

 நூருள் ஹுதா உமர் போதியளவு எரிபொருள் வழங்க வேண்டும் என்றும் எரிபொருளினை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கையை முன்வைத்தும் ஐக்கிய முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள் மாளிகா சந்தியில் பதாதைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (04) முன்னெடுத்தனர். 


இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்; நாங்கள் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக முச்சக்கர வண்டி ஓட்டுநர்களாக தொழில் புரிந்து வருகிறோம் . தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் ( பெட்ரோல் ) தட்டுப்பாடு காரணமாக எங்களது நாளாந்த வாழ்வாதாரத்தை மேற்கொள்ள வருமானமும் கேள்விக்குறியாகி உள்ளது . எங்களது குடும்பங்கள் முச்சக்கர வண்டி முடியாதுள்ளதுடன் அன்றாட தொழிலையே நம்பி வாழ்க்கைச் செலவை கொண்டு செல்கின்றார்கள் . 


மேற்படி பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக எங்கள் தொழிலை தொடர்ச்சியாக செய்ய முடியாது உள்ளத்துடன் பெரும் சிரமத்திற்குள்ளாகி காணப்படுகின்றன . மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மிக நீண்ட வரிசைகளில் நின்ற போதிலும் சிலவேளைகளில் எரிபொருள் கிடைப்பதும் இல்லை . மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றோம் . எனவே இவற்றை கருத்தில் கொண்டு எங்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்ள பொருத்தமான முறை ஒன்றினை செய்து தருமாறும் சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கிறோம் என்றனர். 


எரிபொருள் நிரப்பு நிலைய முன்றலில் இருந்து ஆரம்பித்து பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஐ.எம். சம்சுதீன் ஆகியோரை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்பாட்டகாரர்களுக்கு அதிகாரிகள் உறுதியளித்தனர்.