பதுளை இரட்டை கொலை: சந்தேகநபர் கைது

 
பதுளை, பசறை பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


பதுளை – வீரியபுர பகுதியைச் ​சேர்ந்த 33 வயதான சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முச்சக்கர வண்டி சாரதி எனவும் கொலை செய்யப்பட்ட பெண்ணிடம் கடனாகப் பெற்றிருந்த 20,000 ரூபா பணத்தை மீளச் செலுத்தாமையால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கொலை செய்வதற்கு முன்னர் குறித்த பெண்களை அச்சுறுத்தி தங்க நகைகளை பெற்றுக்கொண்ட சந்தேகநபர், அவற்றை அடகு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த பகுதியில் கடந்த சனிக்கிழமை காலை 2 பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், மற்றுமொரு பெண் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பதுளை தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.