இஸ்ரேலியப் படையினரால் 6 பலஸ்தீனர் சுட்டுக் கொலை : 11 பேர் காயம்






ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலிய படையின் புதிய தேடுதல் நடவடிக்கையின்போது குறைந்தது ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.


கடந்த செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் இஸ்ரேலிய படையினர் வீடு ஒன்றை முற்றுகையிட்டு ரொக்கெட் தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.


நகருக்கு மேலால் ஹொலிகொப்டர்கள் சுற்றிவர இராணுவ வாகனங்கள் நுழையும் காட்சிகள் சமூகதளத்தில் பதிவாகியுள்ளன.


இஸ்ரேலிய குடியேற்றத்தில் உள்ள இரு சகோதரர்களை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர் ஒருவரும் இதன்போது கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அஸ்கார் அகதி முகாமில் மற்றொரு சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேலிய இராணுவம் மூவரை கைது செய்தனர். இதில் ஜெனினில் கொல்லப்பட்ட 49 வயது ஆடவரின் இரு மகன்களும் அடங்குகின்றனர்.


ஜெனினில் ரொக்கெட் குண்டுகளை பயன்படுத்தியது “ஒரு முழுமையான போர் செயல்” என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பேச்சாளர் நபில் அபூ ருதைனி தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவங்களைத் தொடர்ந்து ஹமாஸ் கட்டுப்பாட்டு காசா பகுதியில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ரொக்கெட் குண்டு ஒன்று வீசப்பட்டதை அடுத்து அங்கிருந்து சில கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் இஸ்ரேலிய நகரான நிர் ஆமில் சைரன் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது.


இஸ்ரேலியப் படையின் நடவடிக்கைக்கு எதிராக மேற்குக் கரை முழுவதும் பலஸ்தீனர்களால் நேற்று (08) ஒருநாள் வேலைநிறுத்தம் அனுஷ்டிக்கப்பட்டது.


இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்களுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலில் இந்த ஆண்டு ஆரம்பித்தது தொடக்கம் 71 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 13 இஸ்ரேலியர்கள் பலியாகியுள்ளனர்.