ஒழுக்கவியல் – சிறப்புரிமைகள் குழுவின் தலைவராக சமல் ராஜபக்ஷ தெரிவு


ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், சமல் ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்ததுடன், இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட அதனை வழிமொழிந்தார்.

அதற்கமைய, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் குழுவில் முன்வைக்கப்பட்டு பூர்த்திசெய்ய முடியாமல் போன சில விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கருத்திற்கொள்வது பற்றி கலந்துரையாடப்பட்டது.

மேலும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கு குழுவின் ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சியொன்றை நடத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்கும் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.