முட்டை குறைந்தால் வெதுப்பக சூடு தணியும்

 




ஒரு முட்டையின் விலை ரூ.35 ஆக குறைக்கப்பட்டால் பாண் தவிர்ந்த பிற வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் குறைக்கப்படலாம் என அகில இலங்கை  பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்திய முட்டைகளின் இறக்குமதியைத் தொடர்ந்து முட்டை சந்தையிலுள்ள பிரச்சினைகள் ஒரு வாரத்திற்குள் நிவர்த்தி செய்யப்படும் என நம்புவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டெய்லி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்தார்.


”உள்ளுர் சந்தைகளில் முட்டை விலை ஒரு வாரத்திற்குள் குறைக்கப்பட வேண்டும். அவ்வாறு முட்டை விலை குறைக்கப்பட்டால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் குறைக்கப்படலாம். வெதுப்பகங்களும் உணவகங்களும் இன்னும் ஒரு முட்டை ரூ.55 வீதம் தான் கொள்வனவு செய்கின்றன. பெரும்பாலான சில்லறைக் கடைகளில் முட்டைகள் இல்லை. சந்தையில் முட்டைத் தட்டுப்பாடு நிலவுகின்றது”. என அவர் தெரிவித்தார்.


”நாட்டில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதால் பேக்கரி தொழிற்துறைகள் விலைகளைக் குறைக்கவில்லை என்ற கூற்றுகள் உள்ளன. எரிபொருள் விலைக் குறைப்பு பேக்கரி உற்பத்திகளில் தாக்கம் செலுத்துவதில்லை. ஆனால் எரிபொருள் விலைக்குறைப்பின் நன்மைகளை பேக்கரி உற்பத்திகளுடாக விரைவில் மக்களுக்கு கொண்டு செல்வோம் என நம்புகிறோம்” என ஜெயவர்தன தெரிவித்தார்.