🔴அல்லாஹ்வை தூற்றிய அதே ஞானசார தேரருக்கு ஜெரொம் பெர்னாண்டோவை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? - ஹிதாயத் சத்தார் கேள்வி


மத போதகரென கூறப்படும் ஜெரொம் பெர்னாண்டோ அன்மையில் புத்தரையும் மற்றும் பௌத்த தர்மத்தை பற்றியும் தெரிவித்த கருத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலமுனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது, 


மற்றையவர்களுடைய மத நம்பிக்கையை விமர்சிக்கக் கூடாது என்பதனை இஸ்லாம் உற்பட ஏனைய மதங்களும் வலியுறுத்தும் ஒரு விடயமாக இருந்தாலும் அன்று ஞானசார தேரர் உட்பட இன்னும் பல பேரினவாதிகள் இஸ்லாத்தையும், குர்ஆனையும், அல்லாஹ்வைப் பற்றியும் அவதூறாக பேசிய போது இன்று அமுலாகும் இலங்கையின் சட்டம் எங்கிருந்தது?. அன்று அல்லாஹ்வை தூற்றிய அதே ஞானசார தேரருக்கு ஜெரொம் பெர்னாண்டோவை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?.


 

மத போதகரென கூறப்படும் ஜெரொம் பெர்னாண்டோ புத்தரையும் பௌத்த தர்மத்தையும் மற்றும் இஸ்லாத்தை பற்றியும் தெரிவித்த கருத்து இன நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மோஷமான கருத்து என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 


மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும். எனினும் முஸ்லிம்கள் மீது இனவாதம் கட்டவிழ்த்து விடும் போதும் இதே சட்டத்தில் அன்றைய அரசாங்கம் எந்தவொரு விடயம் குறித்தும் சிந்திக்கவில்லையே, ஞானசார தேரர் முழு முஸ்லிம் சமூகத்தையும் ஏளனமாக பேசிய போதும் அல்லாஹ்வை  மிக மோஷமான  வார்த்தைகளை கூறி தூற்றிய போதும் அது மத அவமதிப்பாக அன்று அவர்களுக்கு தெரியவில்லையா? ஆனால் இன்று பௌத்த தர்மத்தை தூற்றும் போது மாத்திரம் சட்ட நடவடிக்கைகள் குறித்தும் நீதி, நியாயம் குறித்தும் பரவலாக பேசப்படுகிறது.


எனவே இந்நாட்டில் பௌத்தர்களுக்கு ஒரு சட்டம் ஏனைய மதத்தவர்களுக்கு வேறு சட்டமா? 


இது பல்லினத்தவர்களும் வாழும் ஜனநாயக நாடாகும். எமது நாட்டின் சட்ட யாப்பு சகல மதங்களையும் பின்பற்றுவதற்கு அனுமதியளித்திருந்தும் சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும்.  


எனவே அல்லாஹ்வை தூற்றினாலும் புத்தரை தூற்றினாலும் இயேசுவை தூற்றினாலும் அல்லது சிவபெருமானை தூற்றினாலும் சரிசமமாக அவர்களுக்கெதிராக சட்டம் அமுலாக்கப்பட்டு இனவாதம் இல்லாமல் செய்யப்பட வேண்டும். 


மத நிந்தனை செய்து இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக தனியான சட்டம் எமது நாட்டுக்கு அத்தியவசியமாகும். பேச்சு சுதந்திரம் இருப்பதனால் தனது சிந்தனைக்கு வரக்கூடிய எதனையும் பேசமுடியாது, இனவாதத்தினால் நாடு நாசமாப்போனது போதாதா?. இனிமேலும் இனவாதம் இந்த நாட்டில் இருக்கக் கூடாது மற்றும் இனவாதத்தை விதைத்து பதவிக்கு வந்து வரம்புமீறியபோது பாதிக்கப்பட்ட எல்லோரும் ஒட்டுமொத்தமாக கையேந்தியபோது எவ்வாறு அவர்கள் பதவியில் அமர்த்திய அதே மக்களால் விரட்டியடிக்கப்பட்டார்கள் என்பதனை கண்கூடாகக் கண்டோம். 


 

மேலும் இதுவரை காலம் வாயடைத்து இருக்குமிடம் கூட தெரியாமல் இருந்த பல இனவாதிகள் மீண்டும் வெளி உலகிற்கு வந்து கொந்தளித்த வண்ணம் மத அவமதிப்பு பற்றி பேசுகிறது வேடிக்கையாக இருக்கிறது மேலும் இது தோற்றுப்போன இனவாத அரசியல்வாதிகளின் அடுத்தகட்ட நகர்வாகக் கூட இது இருக்கலாம் என்ற சந்தேமும் உள்ளது, 


அன்று அல்லாஹ்வை தூற்றியவனுக்கு ஜெரொம் பெர்னாண்டோவை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? அன்று எத்தனை முறை முஸ்லிம்களை அவமதித்திருந்தார்கள் என்பதனை மறந்து விட்டார்களா? மத அவமதிப்பை அடிப்படையாக கொண்டு ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு என்ன ஆனது என்ற கேள்விக்கு பதில் இல்லை. 


ஆகவே நாடு நாசமாக காரணமான இவர்கள் மீண்டும் தலைதூக்க இடமளித்தால் திரைக்குப் பின்னால் ஒழிந்துகொண்டிருக்கும் இன்னும் பல இனவாதிகள் மீண்டும் ஒருவர் பின்னால் மற்றவர் களமிறங்குவார்கள் எனவே சகல மதத்தவர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் இனவாத்தை வெறுத்தால் மாத்திரமே எமது நாட்டுக்கு விடிவு வரும்.


ஹிதாயத் சத்தார்

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்,

கண்டி மாவட்ட அமைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தி.