Headlines
Loading...
போஸ்டர், ஸ்டிக்கர், கட்அவுட், ஊர்வலங்களுக்கு தடை! மீறினால் கடும் நடவடிக்கை!

போஸ்டர், ஸ்டிக்கர், கட்அவுட், ஊர்வலங்களுக்கு தடை! மீறினால் கடும் நடவடிக்கை!



பெப்ரவரி 10 உள்ளூராட்சி தேர்தல் - ஆணைக்குழுவின் அதிரடி முன்னெடுப்புக்கள்:
*341 உள்ளூராட்சி பிரதேசங்களில் வன்முறை நடந்தால் தேர்தல் ரத்து
*போஸ்டர், ஸ்டிக்கர், கட்அவுட், ஊர்வலங்களுக்கு நேற்று முதல் தடை
*வாக்கெடுப்பு நிலையங்களிலேயே வாக்குகள் எண்ணும் பணிகள்
341 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடாத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அறிவித்தார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் டிசம்பர் 26 ஆம் திகதி வெளிவிடப்படுமென்றும் அவர் கூறினார்.
இதேவேளை தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்பும் இறுதித் திகதி வெள்ளிக்கிழமை(22) நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு வருவதாகவும் ஆணைக்குழுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.
பிரசாரக் கூட்டங்களில் இன, மத, பேதத்தை உருவாக்கும் வகையில் குரோதமான சொற் பிரயோகங்களை பாவிப்போருக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு கடும் நடவடிக்கை எடுக்கும். அதேநேரம் அதிகமான தேர்தல் வன்முறைகள் இடம்பெறும் பட்சத்தில் அப் பிரதேசம் சூன்ய பிரதேசமாக அறிவிக்கப்பட்டு அங்கு தேர்தல் ரத்துச் செய்யப்படுமெனவும் ஆணைக்குழுத் தலைவர் எச்சரித்தார்.
ராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
போஸ்டர், ஸ்டிக்கர், கட்அவுட் மற்றும் ஊர்வலம் ஆகியவற்றுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
தேர்தல் போஸ்டர்களை அப்புறப்படுத்துவதற்கு பதிலாக அவற்றின் மீது நாம் "இது தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயல் என்றும் இதற்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் " என்றும் அச்சடிக்கப்பட்ட போஸ்டரை ஒட்டவுள்ளோம்.
தேர்தல் காலத்தில் அன்பளிப்பு, பரிசளிப்பு மற்றும் புண்ணியச் செயல்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் அரச கட்டிடங்களை பயன்படுத்தி பிரசார கூட்டங்கள் நடத்தினால் , " இது அரசுக்கு சொந்தமான கட்டடம். இதில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதன் மூலம் இது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் உரித்தாக மாட்டாது." என தேர்தல் ஆணைக்குழுவின் பெனர்கள் அங்கு தொங்கவிடப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கட்சி அலுவலகத்தை சோதனை செய்ய முடியும். கட்சி தலைவர் வரும் சந்தர்ப்பத்தில் மட்டும் கூட்டம் நடைபெறும் மைதானத்தின் குறிப்பிட்ட தூரம் வரை சோடனை செய்ய அனுமதிக்கப்படும்.
இம்முறை சுமார் 13 ஆயிரம் நிலையங்களில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதே வாக்கெடுப்பு நிலையங்களிலேயே வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இயலுமானவரை இயற்கை ஒளியுடனேயே எண்ணும் செயற்பாடுகளை ஆரம்பித்து அன்றைய தினமே பெறுபேறுகளை வெளியிட தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு வாக்கெடுப்பு நிலையத்துக்கு 02 பொலிஸார் வீதம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். அத்துடன் கண்காணிப்பு செயற்பாடுகளுக்காக தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து ஒரு பிரதிநிதி தெரிவத்தாட்சி அலுவலகம் தோறும் அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.
வேட்பாளர் செல்லும் வாகனத்தில் மட்டுமே அவரது படம் கொடி, இலக்கம் மற்றும் இலட்சிணைகளை காட்சிப்படுத்த அனுமதியுள்ளது.
அரசாங்க நிகழ்சிகளில் அரசியல் ரீதியான உரைகளை நிகழ்த்த முடியாது. அவ்வாறான உரைகளை பிரசுரிப்பதனை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குப் பின்னர் விநியோகிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் அரசியல்வாதிகளை கேட்டுக் கொண்டார்.
போஸ்டர், ஸ்டிக்கர், கட்அவுட்
மற்றும் ஊர்வலங்களுக்கு தடை
நேற்று முதல் (டிசம்பர் 18 ஆம் திகதி) அமுலுக்கு வரும் வகையில் போஸ்டர், ஸ்டிக்கர், கட்அவுட்
மற்றும் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஊர்வலம் செல்வோருக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நடவடிக்கை எடுக்க முடியாது.எமக்கும் பொறுமை மற்றும் கௌரவம் இருக்கிறது.
அதனை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும். இதுதொடர்பில் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அறியதந்துள்ளோம்.
போஸ்டர்களை ஒட்டுவதற்கு பசையுடன் சேர்த்து கண்ணாடி துகள்கள் பயன்படுத்தப்படுவதனால் அதனை அகற்றுபவர்களின் விரல்கள் காயமடைகின்றன.
இதன் காரணமாகவே குறைந்த செலவில் வெள்ளைத் தாளில் கறுப்பு எழுத்துக்களிலான போஸ்டர்களை ஒட்ட நாம் தீர்மானித்தோம் எனவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.