BREAKING NEWS

Jul 22, 2019

ஹசன் அலியை மு.காவில் இணையுமாறு கோரி , தூது அனுப்பிய ஹக்கீம்!

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்புச் செயலாளர் யூ.எல்.எம்.முபீன் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைவாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் அல் ஹாஜ் எம்.டி. ஹஸனலியினை அவரது நிந்தவூர் இல்லத்தில் சந்தித்தார். 

இச்சந்திப்பின் போது செயலாளர் நாயகம் எம்.டி.ஹஸனலிக்கு செய்யப்பட்ட பல்வேறு அசௌகரியங்களை நினைத்து தலைவர் ரவூப் ஹக்கீம் வருந்துவதாகவும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சமூகத்துக்கான தேவையின் நிமித்தம் செயலாளர் நாயகம் எம்.டி.ஹஸனலியின் வெற்றிடமானது இன்று சகலராலும் உணரப்படுவதாகவும், அதனை அவரால் மாத்திரமே நிவர்த்தி செய்ய முடியும் என்பதாலும் மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சமூகத்துக்கான கடமையினை தொடருமாறும் கேட்டு, ஒரு வேண்டுகோளினை முன்வைத்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்புச் செயலாளர் யூ.எல்.எம்.முபீன் கலந்துரையாடினார். ஆனால் இதற்கு முன்னரும் தலைவர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைவாக இவ்வாறான நடவடிக்கைகளும், பேச்சுவார்த்தைகளும் பலராலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இது தொடர்பில் தனது கருத்தினை தெரிவித்த செயலாளர் நாயகம் எம்.டி.ஹஸனலி நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண அரசியல் சூழ்நிலைகளானது, எமது சமூகம் தொடர்பில் கொண்டிருக்கும் கரிசணையில் பாரிய விரிசலினை ஏற்படுத்தியுள்ளதோடு, எதிர்கால அரசியல் நிகழ்வுகளானது எமது சமூகத்துக்கான உச்சக்கட்ட பாதுகாப்பினை வேண்டி நிற்கும் நிலைமையினை ஏற்படுத்தியுள்ளது.

இனிவரும் காலங்களில் நடைபெற இருக்கும் எந்த தேர்தல்களாக இருந்தாலும் எமது சமூகத்தின் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தினை மையமாகக் கொண்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே மக்களினால் வாக்களிப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்பதால், பாதுகாப்புக்கான உத்தரவாதம் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளையும், பல கட்ட பேச்சுவார்த்தைகளையும் சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் மேற்கொள்ளப்பட்டு அதில் சரி கண்டு, திருப்தி கண்டதன் பின்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு (MOU) அதன் அடிப்படையிலேயே தேர்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது, இன்றைய கட்டாய தேவையாக உள்ளது. 

ஆனால் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் மூலமாக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு (MOU) எமது சமூகத்துக்கு பல்வேறுபட்ட விடயங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்களும், சந்தர்ப்பங்களும் அதிகமாகக் காணப்பட்டும், அதற்கான நடவடிக்கைகள் முறையாக எடுக்கப் படாமையாலும், அல்லது அவைகளினை தவறவிட்ட காரணத்தினாலும் என்னோடு பலருக்கு முரண்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வரக்கூடிய காலங்களிலும் அவைகள் சரி செய்யக் கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படாத படியினாலேயே எனக்கு கட்சியினை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இக்கட்சிக்கான தலைவர் மற்றும் செயலாளர் நாயகம் எனும் சம அதிகாரமுள்ள இவ்விருபதவிகளும் ஒன்று கிழக்கில் இருந்தால் மற்றது கிழக்குக்கு வெளியில் இருக்க வேண்டும் என்ற மர்ஹும் அஷ்ரபின் கொள்கைக்கு அமைவாகவே கடைப் பிடிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு விடயமாகும்.

நான் வெளியேறிய அன்று நடைபெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் " உங்களுக்கு இந்த ஹஸனலி மீது கோபமென்றால் பெறுமதி மிக்க செயலாளர் நாயகம் எனும் இப்பதவியினை எனக்குத் தர வேண்டாம், தலைவர் ரவூப் ஹக்கீமோடு இருக்கும் ஒரு கிழக்கின் மகனுக்கு கொடுங்கள், இப்பதவியினை இல்லாமல் செய்து விட வேண்டாம்" என என்னால் இறுதியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் அக்கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது என்பதனை சகலரும் அறிவார்கள். அன்றே நான் சமூகத்துக்கு ஏற்படக் கூடிய சில பாதகமான விடயங்களை சொல்லியிருந்தேன். இன்று அவைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பபடாது (MOU) மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பாதகமாகவே சென்று முடியும். அதனை இன்றைய கல்முனைப் பிரச்சனையிலும் காணலாம்.

இன்றும் கூட சமூகம் நோக்கிய எனது சிந்தனையில், செயற்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாது எமது சமூகத்துக்கான கடமையினை செய்து கொண்டு தான் இருக்கின்றேன். ஆனால் வெகு சீக்கிரத்தில் ஏதோ ஒரு தேர்தல் மூலம் மக்கள் அவர்களது பதிலினை கூறுவார்கள் என்று சகலரது பிரச்சனைக்கும் பதில் கிடைக்கும் என, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்புச் செயலாளர் யூ.எல்.எம். முபீனிடம் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் அல் ஹாஜ் எம்.டி. ஹஸனலி தெரிவித்தார்.

ஐ.எம்.ஹாரிப் 
பிரச்சாரச் செயலாளர்
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு 

Share this:

Post a Comment

 
Copyright © 2014 Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA. Designed by | Distributed By