சவுதி, துருக்கி, ஈராக், சிரியா, எகிப்து, ஈரான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளை துண்டாடி, அங்கு யுத்தங்களை ஏற்படுத்தி, அந்நாடுகளை பலவீனப் படுத்தி உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்கவே அமெரிக்கா திட்டம் தீட்டி வருகிறது என ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நஜ்ஜாத் குற்றம் சுமத்தி உள்ளார்.
நேற்று அல் ஜஸீரா சர்வதேச ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் பொருளாதரத்தை சீர்குலைத்து உலக பொருளாதரத்தை ஆக்கிரமிப்பதும் அமெரிக்காவின் திட்டம் என சுட்டிக் காட்டினார்.
நாட்டுக்கு வெளியில் சென்று யுத்தங்களில் ஈடுபட அனுமதிக்கும் வெளிவிவகார கொள்கையில் மாற்றங்கள் அவசியம் என தெரிவித்த அவர், தமது நாடான ஈரான் உட்பட, சவுதி அரேபியா, கட்டார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், ஓமான் சிரியா, ஈராக் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தமது வெளிவிவகார கொள்கைகைகளை மாற்றி வெளியில் சென்று யுத்தம் செய்வதை தவிர்த்து, பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தீட்டிய சதித் திட்டங்களே காரணம் என தெரிவித்த அவர், சிரியா, யெமன், பஹ்ரைன் போன்ற நாடுகளில் மோதல்களை தவரிப்பது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
