மஹிந்தவும் அதனை விரும்பவில்லை!

NEWS


அமைச்சரவை மாற்றங்களுடன் தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றம் தொடர்பான தீர்மானம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவிருப்பதுடன், திருத்தங்களுடன் தேசிய அரசாங்கம் பலமான முறையில் செயற்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

நாட்டில் காணப்படும் அரசியல் குழப்பம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பிரதமர் பதவி விலகவேண்டிய தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச கூட ரணில் ஏன் பதவி விலக வேண்டும் எனக் கேட்டுள்ளார் என்றார். உலக வரலாற்றில் அரசாங்கத்தில் இருப்பவர்களே அரசாங்கத்தை விமர்சிப்பது இங்கேயே நடைபெறுகிறது.

சில அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டு வெளியே வந்து வேறு விதமான கருத்துக்களை வெளியிடுகின்றனர். இவ்வாறான நிலைமைகளாலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கம் தொடரும். அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என்றும் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் தனித்து ஆட்சியமைக்கப் போவதாகக் கூறும் அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியினர் தாம் தனித்து ஆட்சியமைக்கப் போவதாகக் கூறுகின்றனர்.

இரு தரப்புக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. இருவரும் இணைந்தாலே ஆட்சியமைக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தவிர ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆட்சியமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

அது மாத்திரமன்றி 2015 ஜனவரி 8ஆம் திகதி ஆட்சி மாற்றத்துக்கு முன்வந்தவர்கள் என்ற ரீதியில் ஆட்சியமைப்பதற்கான உரிமையும் ஐ.தே.கவுக்கு உள்ளது.

இருந்த போதும், இந்த தேசிய அரசாங்கத்தைத் தொடர்ந்து முன்கொண்டு சென்று நல்லாட்சி கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பதாக இருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டார்.

மக்கள் அதிருப்தியடைந்துள்ளமையாலேயே நடைபெற்று முடிந்த தேர்தலில் அரசாங்கத்துக்கு இவ்வாறான முடிவொன்று கிடைத்துள்ளது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற கொலைகள், மோசடிகள் மற்றும் பில்லியன் டொலர் பெறுமதியான வங்கிக் கணக்குகள் போன்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லையென்ற அங்கலாய்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.

இதில் கால தாமதங்கள் இருக்கின்றன. இவற்றில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு தேசிய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
Tags
3/related/default