மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கணவன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய், தந்தை மற்றும் தங்கையை சென்னை ஆவடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் காவேரி (35). பெயர் மாற்றப்பட்டுள்ளது. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 மகள்களுடன் கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். இதன் பின்னர் தஞ்சாவூரில் உள்ள தனியார் வங்கியில் தற்காலிக ஊழியராக பணியில் சேர்ந்தார்.
அப்போது சென்னை ஆவடி சேக்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (35) என்பவருடன் முகநூல் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெங்கடேஷ் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் முகநூல் மூலம் நட்பாக பழகினர். நாளடைவில் காதலாக மாறியதால் கடந்த ஜனவரி மாதம் சென்னை திருவேற்காடு, கருமாரியம்மன் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர், ஆவடி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். ஒருசில வாரங்கள் திருமண வாழ்க்கை நன்றாக போயுள்ளது. இதன் பிறகு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சமயத்தில் வெங்கடேஷ் காவேரியை ஆபாசமாக படம் எடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தம்பதி இடையே பிரச்சினை அதிகரித்துள்ளது. அப்போது வெங்கடேஷ் ஆபாச படங்களை காவேரியிடம் காட்டி முகநூலில் வெளியிட போவதாக கூறி மிரட்டியுள்ளார்.
மேலும் காவேரியிடம் இருந்த 5 பவுண் தங்க நகை, 3 இலட்சம் ரூபா பணத்தை பறித்துக்கொண்டு வெங்கடேஷ் வீட்டை விட்டு விரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவேரி ஆவடி பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் ஆவடி பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர். பொலிஸ் விசாரணையில் மனைவியை ஆபாச படம் எடுத்து வெங்கடேஷ் மிரட்டியமை உறுதியானது.
இதையடுத்து, பொலிஸார் நேற்று வெங்கடேஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தந்தை ரங்கசாமி (53), தாய் விஜயா (47), தங்கை புவனேஸ்வரி (32) ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

0 கருத்துகள்