மஹிந்த விலகாவிட்டால் நாங்கள் விலகுவோம்” ; அலி சப்ரி உட்பட நான்கு அமைச்சர்கள் அதிரடி தீர்மானம்.?


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு, தனது பதவியை

இராஜினாமா செய்யவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இன்று (09) அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதமர் தனது இராஜினாமாவை அறிவிப்பார் என அரச வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.


எவ்வாறாயினும், பெசில் ராஜபக்ஷ இன்று காலை ஆயிரக்கணக்கான பொதுஜன பெரமுன ஆதரவாளர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்துள்ளதுடன், உள்ளூராட்சி பிரதிநிதிகள் குழுவொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க தயாராகி வருகிறது. பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவி விலகாவிட்டால் நான்கு அமைச்சர்கள் பதவி விலக உள்ளனர். பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, அலி சப்ரி மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.


திங்கட்கிழமை (09) பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்த நிலையில், சனிக்கிழமை அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.