பிணையில் விடுதலையானார் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுடன் கைதான மெளலவி சலீம் கான் மொஹம்மட் சகீல்


(எம்.எப்.எம்.பஸீர்)


உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுடன் அவ்வழக்கை எதிர்கொள்ளும் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் அதிபர் மெளலவி சலீம் கான் மொஹம்மட் சகீல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


கடந்த 2021 பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் விளக்கமறியலில் இருந்து வந்த நிலையிலேயே அவர் நேற்று (25) புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி, நதீ அபர்ணா குணதிலகவினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


சகீல் மெளலவியின் சட்டத்தரணிகள் நகர்த்தல் பத்திரம் ஊடாக முன்வைத்த பிணை கோரிக்கைக்கு அமைய இந்த பிணை உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.


புத்தளம் மேல் நீதிமன்றில், மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை போதித்ததாக, ஏற்கனவே இரு மெளவிகளான வஸீர் மற்றும் லுக்மானுடன் சேர்த்து சகீல் மெளவிக்கு மற்றொரு வழக்கும் தொடுக்கப்பட்ட நிலையில் அவ்வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் பிணையளிக்கப்பட்டிருந்தது.


எனினும் சட்டத்தரணி ஹிஜாஸுடன் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட வழக்கில் தொடர்ந்தும் அவர் விளக்கமறியலில் இருந்து வந்தார். இந்நிலையிலேயே நேற்று அவருக்கு பிணையளிக்கப்பட்டது.


இதற்கு முன்னர் இவ்வழக்கின் முதல் பிரதிவாதியான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிச்புல்லாஹ்வுக்கு 667 நாட்கள் தடுப்பின் பின்னர் பிணையளிக்கப்பட்டிருந்தது.


முன்னதாக உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் தொடர்புபட்ட சினமன் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய இன்சாப் அஹமட் எனும் குண்டுதாரியுடன் தொடர்புகளை பேணியதாக கூறி, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி சி.ஐ.டி. யினரால் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டிருந்தார்.


அன்று முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரை, தண்டனை சட்டக் கோவையின் 102, 113 (ஆ) ஆகிய அத்தியாயங்களின் கீழும், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ( உ) பிரிவின் கீழும், 2007 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3(1) ஆம் உறுப்புரையின் கீழும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்துவதற்கான நம்பகரமான தகவல்கள் விசாரணையில் வெளிப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியே, அக்குற்றச்சாட்டுக்களின் கீழ் அவரை மன்றில் ஆஜர் செய்ய சட்டமா அதிபர் கடந்த 2021 பெப்ரவரி 17 ஆலோசனை வழங்கினார்.


அதன்படி இக்குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு, ஹிஜாசிடம் வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்துகொண்டு அதன் பின்னர் அவரை குற்றவியல் சட்டக் கோவை நடைமுறைக்கு அமைய நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் அறிவித்த நிலையிலேயே முதன் முறையாக கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி ஹிஜாஸ் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு அன்று முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இவ்வாறான நிலையிலேயே சட்டமா அதிபர் கடந்த 2021 பெப்ரவரி 17 வழங்கிய ஆலோசனைக்கு அமைய ஹிஜாஸுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக கூறி, அல் சுஹைரியா மத்ரஸாவின் அதிபர் மொஹம்மட் சகீல் அன்றைய தினமே சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே அவ்விருவருக்கும் எதிராக தற்போது புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதி நிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம் எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற் பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், 'இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்' என கூறி இஸ்ரேல் - பலஸ்தீன் யுத்த வீடியோக்களை கண்பித்தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனைவிட, பலஸ்தீன் - இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இவ்வழக்கின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.