இலங்கையை வந்தடைந்த அவுஸ்திரேலிய இருபதுக்கு 20 கிரிக்கெட் அணி : கடும் பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்(என்.வீ.ஏ.)


இலங்கையுடன் மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் முதலாவது தொகுதியினர் கொழும்பை நேற்று வந்தடைந்தனர்.


இரண்டு அணிகளுக்கும் இடையில் முதலாவதாக நடைபெறவுள்ள சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணி வீரர்களே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.


அவர்களில் பெரும்பாலானவர்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளனர்.


கடைசியாக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய வீரர்கள் இந்த மாதக் கடைசியில் இலங்கை வருகை தரவுள்ளனர்.


அவுஸ் திரேலிய வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது முதல் அவர்கள் ஹோட்டலுக்கு செல்லும் வரை கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டது.


கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் அவுஸ்திரேலிய அணியினர் தமது பயிற்றுநர் குழுவினருடன் இலங்கை வந்துள்ளனர்.


அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் ஜூன் 7, 9, 11ஆம் திகதிகளில் நடைபெறும். முதல் இரண்டு போட்டிகள் கொழும்பிலும் கடைசிப் போட்டி கண்டியிலும் நடைபெறும்.


அதனைத் தொடர்ந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரும் அதன் பின்னர் டெஸ்ட் தொடரும் நடைபெறும்.