அரசியல் ஆட்டத்தால் 21 ஆவது திருத்தம் ஆபத்தில்!


நீதியமைச்சரின் 21 ஆவது திருத்தம், அரசாங்கத்தின் 21 ஆவது திருத்தம், எதிர்க்கட்சியின் 21 ஆவது திருத்தம் என எதுவும் இல்லை எனவும், ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தனி நபர் பிரேரணையாக கொண்டு வரப்பட்ட 21 ஆவது திருத்தம் மாத்திரமே தற்போதுள்ள ஒரே ஒரு திருத்தம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். 


உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்றத்தின் மூன்றாவது வாரத்தில் அது குறித்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். 


எவ்வாறாயினும், இந்நாட்டில் சீர்திருத்தங்களை விட அரசியல் விளையாட்டுகளால் மூழ்கியிருப்பதால் இது பற்றி விவதாதிக்கப்படாத இரண்டாம் பட்ச கவனிப்பே இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான தீர்வு புதிய மக்கள் ஆணையிலையே தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


இந்நெருக்கடிக்கு சில மாதங்களில் தீர்வு இருப்பதாக சில வீரர்கள் பெருமை பேசினாலும் கூட, உண்மையான நிலைப்பாடு அவ்வாறு இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


புதிய சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு சகல தரப்புகளினதும் யோசனைகள் இன்றியமையாதது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். 


மறுசீரமைப்புக்கான தேசிய இயக்கத்தின் பிரதிநிதிகள் குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (15) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.