விசாரணையில் தாமதம் : மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கவலை தெரிவித்துள்ள பிரசன்ன



முனீறா அபூபக்கர்


கடந்த மே மாதம் 9ஆம் திகதி உடுகம்பலையில் தமது வீடு எரிந்து நாசமானது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு செய்த முறைப்பாட்டின் விசாரணை தாமதமானமை குறித்து கவலை தெரிவித்து நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


கடந்த 16ஆம் திகதி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், வீடு எரிப்பு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுவதற்கான திகதி மற்றும் நேரத்தை வழங்குமாறு நான்கு தடவைகள் எழுத்து மூலம் கோரியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ஆனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்காமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கவலை வெளியிட்டுள்ளார்.


கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி, இல. 180/A, மினுவாங்கொட வீதி, உடுகம்பளையில் அமைந்துள்ள அவரது வீடு போராட்டக்காரர்களால் எரித்து நாசமாக்கப்பட்டது. இது சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு இலக்கம் HRC/1919/22 இன் கீழ் அமைச்சர் முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்திருந்தார்.


கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி காலை 10.00 மணியளவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வீடு எரிந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த ஆணைக்குழுவின் செயலாளர் அழைப்பாணை மூலம் அறிவித்ததாகவும், ஆனால் அன்றைய தினம் பாராளுமன்ற தினம் என்பதால் அதற்கான வேறு திகதியை வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எழுத்து மூலம் அவருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, தனது முறைப்பாடு தொடர்பில் ஆணைக்குழு கவனம் செலுத்தி, தமக்கு உரிய திகதி மற்றும் நேரத்தை வழங்குமாறு, கடந்த 16ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கோரியுள்ளார்.